அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை

நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்க்கையை விரைவாக அடைய இதோ ஓர் எளிய வழி! காலையில் நீங்கள் வழக்கமாக எழுந்திருப்பதைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு நடவடிக்கை என்ற கணக்கில் வெறும் ஆறு நடவடிக்கைகளை மட்டும் மேற்கெள்ளுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது முற்றிலும் உண்மை. 

இந்நூலின் ஆசிரியர் ஹால் எல்ராடின் வாழ்க்கையே அதற்கு சாட்சி. சாவின் விளிம்புவரை அவரை அழைத்துச் சென்ற ஒரு கோர விபத்து அவருடைய உடலையும் மூளையையும் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மனத்தளவிலும் அவரைப் படுகுழியில் தள்ளியது. 

இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் அதே உத்திகளைப் பயன்படுத்தி அவர் தன்னுடைய மோசமான நிலையிலிருந்து மீண்டதோடு மட்டுமல்லாமல், குறுகிய காலத்திற்குள் சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு நூலாசிரியராகவும், ஓர் ஆலோசனையாளராகவும், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் உயர்ந்துள்ளார். அந்த உத்திகளை இவ்வுலகிலுள்ள பிறருடன் பகிர்ந்து கொள்ளுவதற்காகவே அவர் இந்நூலை எழுதியுள்ளார்.

நம்முடைய பிரச்சனையிலிருந்து மீண்டு, நாம் கற்பனை செய்கின்ற அசாதாரணமான வாழ்க்கையை உருவாக்குவதற்கான திறன் நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது என்பதற்கான வாழும் ஆதாரமாக ஹால் திகழுகிறார். அவருக்கு இருபது வயதாக இருந்தபோது, குடித்துவிட்டு லாரியோட்டி வந்த ஒருவர் அவர்மீது மோதியதில், ஹாலுக்குப் பதினோரு எலும்புகள் முறிந்தன, அவருடைய மூளை நிரந்தரமாக பாதிப்படைந்தது. 

அவரால் இனி ஒருபோதும் நடக்க முடியாது என்று அவருடைய குடும்பத்தாரிடம் கூறப்பட்டது. ஆனால் ஹால் அதைப் பொய்யாக்கி, ஒரு தலைசிறந்த தொழிலதிபராகவும், மராத்தான் ஓட்டக்காரராகவும், பிரபலமான நூலாசிரியராகவும், சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளராகவும் ஆகியுள்ளார். மக்கள் தங்களுடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த அவர்களுக்கு உதவுவதற்காக ஹால் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.

Leave a Reply