என் கிருஷ்ணரின் பெயரைச் சொல்வதால்

🌺மன்னன் புருஷோத்தமன், தினமும் கிருஷ்ணரை வணங்காமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். காலையில் எழுந்ததும் “ஹரி ஹரி’ என்று ஏழு தடவை சொல்லுவான்.
 
🌺அரண்மனைக்கு கிளம்பும் முன் கேசவா, கேசவா என்பான். சாப்பிடும் முன் “கோவிந்தா’ என்பான். தூங்கச்செல்லும் முன் “மாதவா’ என்பான். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒன்று வீதம் பரந்தாமனின் பதினாறு திருநாமங்களையும் ஏழு தடவை சொல்வது அவனது வழக்கம்.
 
🌺என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும், முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், அதை யாரானாலும் அனுபவித்து தான் தீர வேண்டும். பாவத்திற்குரிய தண்டனையை கடவுள் தந்தே தீருவான்.
 
🌺மன்னன் புருஷோத்தமனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு கிருஷ்ணரின் பெயர் மட்டும் மறக்கவில்லை.
 
🌺“கிருஷ்ணா… கிருஷ்ணா… என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள்,” என புலம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார்.
 
🌺அவரிடம், சுவாமி, என்னால் நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் வாழ்வை முடிக்க விரும்புகிறேன். உயிர் பிரிய மறுக்கிறதே, என அழுதான்.
 
🌺முனிவர் அவனைத் தேற்றி, “மன்னா! நீ அன்னதானம் செய்தாயா?” என்றார். ஆமாம் சுவாமி! இப்போதும் கூட தினமும் என் நாட்டு சத்திரங்களில் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன், என்றான்.
 
🌺“இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. உன் உயிர் பிரிந்து விடும்,” என்றார்.
 
🌺“ஏன் இப்படி சொல்கிறீர்கள் சுவாமி! இது மேலும் எனக்கு பாவத்தை சேர்த்து நோய் தீவிரமாகுமே!” என்று கேட்டான் மன்னன்.
 
🌺“மன்னா! அரைகுறை உணவிட்டால் சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்,” என்றார் முனிவர்.
 
🌺அவர் சொன்னது பிடிக்காவிட்டாலும், பெரியவர் சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான்.
 
🌺சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.
 
🌺“இதென்ன ஆச்சரியம்,” என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில் முனிவர் மீண்டும் வந்தார்.
 
🌺“சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே,” என்றான் மன்னன்.
 
🌺“மன்னா! புருஷோத்தமா…. வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது, ” *அச்சுதா… அச்சுதா* ‘ என கிருஷ்ணரின் இன்னொரு பெயரைச்சொல்லி அன்னம் இடுகின்றனர்.
 
🌺“அச்சுதன்’ என்று பெயர் சொன்னால் உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ இறைவன் பெயரைச் சொல்வதையும் நிறுத்து,” என்றார். ஆனால், மன்னன் மறுத்துவிட்டான்.
 
🌺“என் கிருஷ்ணரின் பெயரைச் சொல்வதால், எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். அவர் பெயர் சொல்வதை மட்டும் நிறுத்தவே மாட்டேன்,” என சொல்லிவிட்டான் மன்னன்.
 
🌺அவனது மனஉறுதியை கண்ட கிருஷ்ணர், அவனுக்கு காட்சியளித்து சுகமடையச் செய்தார்.
 
🌺பரந்தாமன் கிருஷ்ண நாமத்துக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது. இனி நம் குழந்தைகளுக்கும் கிருஷ்ணா, கண்ணா, அச்சுதா என்று பெயர் வைத்து அழைப்போம், பரந்தாமன் அருள் பெறுவோம்.