இறந்த சரீரத்தில் ஆன்மா இருக்குமா

ஒரு சாது, ரமண மகரிஷியிடம் “ஆத்மா எங்கும் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறதே. அப்படியானால் அது இறந்து போன சரீரத்திலும் இருக்குமா”? என்று கேட்டார்.

“இந்தக் கேள்வி உமக்கு வந்ததா, அல்லது இறந்து போன சரீரத்துக்கு வந்ததா?” என்று ரமணர் கேட்டார்.

“எனக்குத் தான்”.

உமக்கு தூக்கத்தில் நான் இருக்கிறேனா, இல்லையா? என்ற சந்தேகம் உம்மைப் பற்றி வந்ததா?”விழித்த பிறகு தானே நான் இருக்கிறேன் என்கிறீர். அதே போல இறந்து போன சரீரத்திலும் ஆத்மா இருக்கத்தான் செய்யும்.

உண்மையை விசாரித்து அறிந்தால், இறந்து போன சரீரமும் இல்லை, பிழைத்த சரீரமும் இல்லை.

அசைவதை “பிழைத்தது” என்றும், அசையாததை “செத்தது” என்கிறோம். நமது கனவில் இருப்பவர்கள், இறந்தவர்கள் இன்னும் பலவற்றைப் பார்க்கிறோம்.

விழித்து எழுந்ததும், அவை எதுவும் இல்லை. அது போலவே வாழ்க்கை. இது ஒரு தூக்கம், கனவு. உண்மையில் இங்கு எதுவும் இல்லை. “நான்” என்ற எழுச்சி இல்லாமல் போவதே மரணம். “நான்” என்ற எழுச்சி முளைப்பதே பிறப்பு. இந்த எழுச்சி ஒரு அகங்காரம். பிறப்பும், இறப்பும் இந்த அகங்காரத்திற்குத் தான்.

இந்த “நான்” என்கிற எழுச்சி இருந்த போதும் நீர் இருக்கிறீர். இல்லாத போதும் நீர் இருக்கிறீர். இந்த எழுச்சிக்கு நீர் மூலமேயன்றி, நீரே மூலமில்லை. இந்த மூலத்தை அறிந்து பின் சாக வேண்டும் என்று கூறினார் ரமணர்.

Credit: Osho Link

Leave a Reply